Sunday 14 August 2011

விநாயகர் சதுர்த்தி


விநாயகருக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஹேரம்பன், லம்போதரர், குகாக்கிரசர், ஸ்கந்தபூர்வஜர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கஜமுகன், ஓங்காரன், பிரணவன், மஹோட்கடன் என்று பல பெயர்கள் உண்டு.

ஆவணி மாதம் சுக்கில பட்சத்தில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடப்படுகிறது.

பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு ஒரு தலைவாழை இலை போடவேண்டும். இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி மேலே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ, ஜாதிமல்லி போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு, தேங்காய் பூரணம் வைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) விநாயகருக்குப் படைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைக்குள் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெளியே இருக்கும் மாவு இந்த உலகத்தைக் குறிக்கிறது. உள்ளே இருக்கும் பூரணம்தான் இறைவன். இந்த உலக வாழ்க்கை என்ற மாயையைத் துறந்தால், 'இறைவன்' என்ற பூரணத்தை அடையலாம். கொழுக்கட்டையோடு அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய் போன்றவற்றையும் படைக்கலாம். பிறகு 108 விநாயக அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

மாலையில் அல்லது விநாயகர் சதுர்த்திக்கு மூன்றாம் நாள் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தயிர்சாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்! 

நிவேதனமாக, மோதகம், கடலைப் பருப்பு கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை, உளுத்தங் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

 

No comments:

Post a Comment