Wednesday 31 August 2011

சிவனின் திருவிளையாடல்கள்

பிட்டுக்கு மண் சுமந்த லீலை

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையிலுள்ள அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில் (மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் உள்ளது.) தான் நடைபெற்றது. வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகர் முழுவதும் அலைக்கழித்தது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டியன் உத்தரவிட்டான். இச்செய்தி மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்துக் கொண்டிருப்பவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்து விட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள்.. வெள்ளத்தை தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி என ஒதுக்கப்பட்டது. வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. இந்த தள்ளாத வயதில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதை அறிந்து கொண்ட சுந்தரேஸ்வரப் பெருமான் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன், கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார். பாட்டியும் ஒத்துக்கொண்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன் பிறகு, ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கு கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார் அந்த ஆடல்வல்லான் சிவபெருமான். ஆக, அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார்.

ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா? ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்? என்று கண்காணிப்பாளர் கண்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான். அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட லோகநாயகனான சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆனால் மன்னன் ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கிய எம்பெருமான் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்தார். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு வந்திறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், “தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தர விட்டிருக்கிறார். தாங்கள் எங்களுடன் வாருங்கள்” என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள்.

இந்த ஆண்டிற்கான பிட்டுக்கு மண் சுமந்த லீலை வரும் செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் 108 போற்றி

விநாயகர் சதுர்த்தி (1-Sep-2011) வந்துவிட்டது. விநாயகரை வழிபட உதவும் வகையில் இதோ உங்களுக்காக "விநாயகர் 108 போற்றி"
 
ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
ஓம் வாதாபி கணபதியே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினோய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்ற துணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதவிழுப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருளாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் ஆனைமுகத்தானே போற்றி
ஓம் ஒற்றைக்கொம்பனே போற்றி
ஓம் வேழமுகத்தானே போற்றி
ஓம் வரமருள் வள்ளலே போற்றி
ஓம் காலத்தை வென்றாய் போற்றி
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி
ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
ஒம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி
ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஒம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி
ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!! 

Sunday 28 August 2011

ராகு காலம் மற்றும் எமகண்டம்

ஜோதிட சாஸ்திர விதிப்படி, ராகு காலத்தில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாது; எமகண்டத்தில் கெட்டகாரியங்கள் செய்யக்கூடாது.

ராகு காலத்தில் தங்க நகை வாங்குதல், பட்டு ஆடைகள் வாங்குதல், திருமணம் அல்லது வீடு வாங்கிட பேச்சை ஆரம்பித்தல், சொத்துக்கள் வாங்குதல், புதிய நிறுவனம் ஆரம்பித்தல் கூடாது. இதை மீறிச்செய்தால் அந்த காரியங்கள் வெற்றி பெறாது. ஏனெனில், ஜோதிடப்படி நவக்கிரகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி. ஆனால், ராகு மற்றும் கேதுவுக்கு என தனிக்கிழமைகள் ஒதுக்கப்படவில்லை.

ஆகையால் வார நாட்களில் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை ராகு பகவான் ஆளுகிறார்.

மேலே சொன்னவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வெனில், ராகு திசை நடக்கும் ஜாதகர்களுக்கும், திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மேலே சொன்ன விதிகள் பொருந்தாது.
இவர்கள் ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்யலாம். காதலிக்கத் தொடங்க(!?!), திருமணப்பேச்சு எடுக்க, சொத்துக்கள் வாங்கிட, புதிய நிறுவனங்கள் வாங்கிட, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பட்டு ஆடைகள், செல்போன், வாகனங்கள் என எதையும் வாங்கிட மிக நன்று.

எமகண்டத்தில் கெட்டது செய்யக்கூடாது. அதென்ன கெட்டது. . . நமக்குப்பிடிக்காத நமது சக ஊழியரைப்பற்றி இன்னொரு ஊழியரிடம் போட்டுக்கொடுப்பது, மேலதிகாரியிடம் போட்டுக்கொடுப்பது, போன்றவற்றை செய்ய ஆரம்பிக்கக்கூடாது.

ஆசை (பற்று)

நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை; இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. ஆக நாம் எந்த ஒரு பொருளின் மீதும் பற்று வைக்காமல் இறைவனையே எண்ணி சரணாகதி அடைவோமாக!!!

ஆசை (பற்று) வைக்கவேண்டும் பொருள் மீது அல்ல; பரம்பொருள் மீது.
நம் எண்ணங்களை சிதற விடாமல், பரம்பொருள் மீது மட்டுமே அதிக பற்று வைத்து இறைவனின் அருளைப் பெறுவோமாக!

ஆவணி ஞாயிறு

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க, கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை” முக்கியத்துவம் பெற்றது. "ஞாயிறு” என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

Sunday 21 August 2011

பழமொழி

'அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்'

இறைவனின் திருவடியை பற்றிக் கொண்டால் நமக்கு எல்லா வித நன்மைகளும் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.
அதாவது, இறைவனின் அடியை (திருவடியை) நாம் சரணடைந்தால் அதுவும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனே கதி என்று நாம் இருந்தால் நமக்கு எல்லா விதமான உதவிகளையும் இறைவன் நமக்குச் செய்வார்.


'ஆறிலும் சாவு; நூறிலும் சாவு'
 
மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் சரி; நூறு கௌரவர்களோடு
கர்ணன் இருந்திருந்தாலும் சரி, கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. அது விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

'பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை' 


அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையாரில் தொடங்கி குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் (ஆன்மீகம் மட்டுமல்ல அனைத்து நிகழ்ச்சிகளும்) விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கியே அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும், ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, இறுதியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்தும், கேட்டும் இருக்கலாம். இப்படி பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.

அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

Sunday 14 August 2011

விநாயகர் சதுர்த்தி


விநாயகருக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஹேரம்பன், லம்போதரர், குகாக்கிரசர், ஸ்கந்தபூர்வஜர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கஜமுகன், ஓங்காரன், பிரணவன், மஹோட்கடன் என்று பல பெயர்கள் உண்டு.

ஆவணி மாதம் சுக்கில பட்சத்தில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடப்படுகிறது.

பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு ஒரு தலைவாழை இலை போடவேண்டும். இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி மேலே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ, ஜாதிமல்லி போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு, தேங்காய் பூரணம் வைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) விநாயகருக்குப் படைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைக்குள் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெளியே இருக்கும் மாவு இந்த உலகத்தைக் குறிக்கிறது. உள்ளே இருக்கும் பூரணம்தான் இறைவன். இந்த உலக வாழ்க்கை என்ற மாயையைத் துறந்தால், 'இறைவன்' என்ற பூரணத்தை அடையலாம். கொழுக்கட்டையோடு அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய் போன்றவற்றையும் படைக்கலாம். பிறகு 108 விநாயக அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

மாலையில் அல்லது விநாயகர் சதுர்த்திக்கு மூன்றாம் நாள் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தயிர்சாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்! 

நிவேதனமாக, மோதகம், கடலைப் பருப்பு கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை, உளுத்தங் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

 

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்று கேரளாவிலும் போன்ற இவ்விழா கொண்டாடப்படுகிறது.

நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.


 ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர் - தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

   
பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணன் தன் இளம் வயதைக் கழித்தார்.

 தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி கோகுலாஷ்டமியாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.


 அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும்.

 
வழிபாட்டு முறை:

 கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.



  தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

ஆவணி மாதம் - மகா சங்கடஹர சதுர்த்தி

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் அதிசய தோற்றத்தைக் கண்டு சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் அழகு மற்றும் கலைகள் அனைத்தும் கலையிழந்து போகுமாறு சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.

ஒருமுறை தண்டகாவனத்தில் வசித்து வந்த “விப்ரதன்” என்னும் வேடன், கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.

“ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன்.

விரத பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

ஆன்மீகம் - ஆவணி மாதம்


தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் மூல நட்சத்திரத்தன்று, சிவ பெருமான் உயிர்களுக்கெல்லாம் ஆசி தரும் நிகழ்வு ஆற்றங்கரையில், பிட்டுத் திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதத்தின் ரோகினி நட்சத்திரத்தன்று கண்ணபிரானின் பிறந்த நாள் "கிருஷ்ணா ஜெயந்தி" எனக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா கண்ணபிரானின் ஊர்வலத்துடன் இரண்டு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம் என்பது ஒரு ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார்.
சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர் இவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
எனவே தான் ஆவணி மாதத்தில் கிரஹப் பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம், திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.
விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.
ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றே கூறலாம்.

ஆவணி அவிட்டம்


ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும். இது ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் ‘ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்’ என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி 108 அல்லது 1008 முறை ஜெபிக்க பாவம் நிவர்த்தியாகும்.

சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.

Wednesday 3 August 2011

வரலெட்சுமி விரதம்



மகாலெக்ஷ்மி பாற்கடலில் உதித்த தினம். சுமங்கலிகள் மட்டும் அனுஷ்டிப்பது. (சில சமயம் ஆவணியிலும் வரும்)

மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு விழாவை காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்ப பெண்கள் காவிரிக் கரையில் கொண்டாடுவது வழக்கம். 'ஆடி பெருக்கு' அன்று காவிரியில் குளிப்பது விசேஷமானது.

இக்காலத்தில் காவிரி தாய் 'மசக்கையாக' (கர்ப்ப காலம்) இருப்பதாக கருதி படையல் படைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள மூத்த பெண் படையலுக்கும், காவிரித் தாய்க்கும் தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்வார்.


சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள். கைலாயத்தில் சிவன் - பார்வதி திருமணத்தின் போது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, 'தென்புலம் சென்று பூமியை சமநிலையாக்குமாறு' சிவபெருமான் பணித்தார். சிவனை திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவமிருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிட்ம வழங்கினாள் பார்வதி. அவரும் அந்தப் பெண்ணை தன் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. கமண்டலத்தில் மீதமிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வாசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.
 
அண்ணனின் சீர்வரிசை: சாதாரண மக்களே காவிரியன்னைக்கு பூஜைகள் செய்யும்போது, அவளது அண்ணனான 'ரங்கநாதர் சும்மாயிருப்பாரா? 'ரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று 'ரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் 'நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

ஆடிப்புரம்

இந்த ஆடிப்புரம் என்பது சைவம், வைணவம் இரண்டு சமயத்தவர்களும் கொண்டாடும் சிறப்புக்குரிய நாளாகும்.
முதலில் சைவம்:
ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்று முன்பே அறிந்தோம். இந்த ஆடி மாதத்தின் முதல் நாளன்று அம்மன் ருதுவானதாக கூறப்படுகிறது. பொதுவாக ருதுவான பெண்களை 16 நாட்கள் (முன்பு 18 நாட்கள்) வீட்டை விட்டு தள்ளி வைத்து விட்டு 17-ம் நாளன்று சடங்கு செய்து வீட்டிற்குள் அழைத்துச் செல்வார்கள். அதே போல அம்மனுக்கு நடக்கின்ற அந்த சடங்குதான் ஆடிப்புரம் எனப்படுகிறது. இந்த நாளில் மட்டும் தான் அம்மனுக்கு முத்தங்கி சாற்றப்படுகிறது.
இது சைவத்தில்...



வைணவத்தில்:
ஆடிப்புரம் என்பது ஆண்டாள் குழந்தையாக அவதரித்து பெரியாழ்வாரால் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட நாள். 



ஆடி வெள்ளி - இலக்குமி பூஜை

கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும்  சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.


ஆடி வெள்ளியன்று இலக்குமியை வழிபட்டால், பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அருளோடு வரும் பொருள் என்று தான் பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் இலக்குமி என்றும், திருமகள் என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லக்குமியின் அருள் இருந்தால், நாம் திட்டமிட்ட படியே வாழ்க்கையை நடத்த இயலும்.





பழ அலங்காரம்
வளையல் அலங்காரம்

 திருத்தேர் அலங்காரம்






குத்துவிளக்கை இலக்குமியாக பாவித்து அலங்கரித்து பொன் ஆபரணங்கள் சூட்டி (தங்களால் இயன்ற அளவு வீட்டில் உள்ள நகைகளை அணிவித்து), மரப்பலகையில் மஞ்சளால் கோலமிட்டு அதன் மேல் பட்டுத் துணி விரித்து அதில் பச்சரிசியை சிறிதளவு தூவி அதில் இலக்குமியை (அதாவது அலங்கரித்த குத்து விளக்கை) அமரச் செய்யவும்.


இது ஒரு விதமான வழிபாடு. மற்றொன்று,

ஒவ்வொரு ஆடி மாதமும், ஆடிவெள்ளியன்று (அது முதல் வெள்ளியாக இருந்தாலும் சரி அல்லது அம்மாதத்தின் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை) அம்மனை ஆவாகணம் செய்து வழிபடுவது ஒரு முறை.






ஆன்மீகம் - ஆடி மாதம்

முதலில் ஆடி மாதத்தில் இருந்து தொடங்குவோம்.

வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

ஆடி மாதம் துவ‌ங்‌கி‌வி‌ட்டாலப‌ண்டிகைகளு‌மதுவ‌‌ங்‌கி‌வி‌ட்டதஎ‌ன்றே‌ககூறலா‌ம். அ‌திலு‌மஇ‌ம்மாத‌ம் அம்மனுக்கு உகந்த மாதம்.


ஆடி பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி‌க் ‌கிரு‌த்‌திகை, வரலட்சுமி விரதம் ஆகிய பண்டிகைகள் வ‌ந்து ‌தி‌க்குமு‌க்காவை‌க்கு‌மமாதமு‌மகூட.
பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகை களாகும். 

ஆடி மாதப் பழமொழிகளாக "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்.', கூறப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண் டும்.

ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும். 

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும். 

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.


அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 

ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. 

Monday 1 August 2011

பிரதோஷம்





சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
  • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
  • வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
  • நோய்கள் நீங்கும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.
பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷ வரலாறு

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல்  அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
திருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். நடப்பதை கண்டு அஞ்சிய அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட “நீலகண்டர்”-என திருப்பெயர்ப் பெறலானார் சிவபெருமான்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
    மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
    பழங்கள் - விளைச்சல் பெருகும்
    சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
    சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
    தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
    பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
    எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்
    இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
    பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    தயிர் - பல வளமும் உண்டாகும்
    நெய் - முக்தி பேறு கிடைக்கும்

பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை

பிரதோஷ காலத்தில் திருக்கோவிலை சாதாரணமாக வலம் வருவதைப் போல வலம் வரக்கூடாது. மாறாக, சோம சூட்ச பிரதட்சண முறையில் தான் வலம் வர வேண்டும். அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.