Friday, 8 June 2012

ஆனித் திருமஞ்சனம்


தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். 
ஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கு உகந்தது. சிவாலயங்களில் சிவனுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்த நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் சகல விதமான பாவங்களும் தீரும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனுக்கு உகந்த விரதங்களில் இந்த திருமஞ்சனமும் ஒன்று.

அன்றைய தினம் சிவதலங்களில் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும். அன்றைய தினம் விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல், ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்தால் அனைத்து விதமான பலனும் கிடைக்கும்.

இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பொன்னம்பலமான சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். வெள்ளியம்பலமான மதுரையில் சுந்தரத் தாண்டவம் ஆடினார். இங்கு ராஜசேகர பாண்டியன் வேண்டிக் கொண்டதால், கால் மாறி வலதுகாலைத் தூக்கி ஆடியதாக வரலாறு சொல்கிறது. தாமிரசபையான திருநெல்வேலியில் இறைவன் ஆடியது சங்காரத் தாண்டவம்.

சித்திர சபையான குற்றாலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளதால், இத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரிந்தார் என்பர். ரத்தின சபையான திருவாலங்காட்டில் வலக்காலை உச்சந்தலை வரைத் தூக்கி அனைவரும் வியக்கும் வண்ணம் ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார்.

திருவெண்காடு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடனசபை ஆதி சித்சபை என்று போற்றப்படுகிறது. இங்கே சுவாத கேது என்ற மன்னன் வேண்டிக்கொண்ட வண்ணம் இறைவன் நவ தாண்டவங்கள் ஆடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதற்குப் பிறகுதான் சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடினாராம். அதனால் இத்தலத்தினை ஆதிசிதம்பரம் என்று சொல்வர்.

இதேபோல் பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.

இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.

ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர்.

இத்தனை சிறப்புமிக்க ஆனித் திருமஞ்சனம் இந்த ஆண்டு 25-6-12 வருகிறது.

ஆனி மாதம்

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். ஆனி மாதத்தின் மிகச் சிறப்பான விரதம் "ஆனித் திருமஞ்சனம்" ஆகும்.

Saturday, 12 May 2012

வைகாசி மாதம்

தமிழர் காலக் கணிப்பு முறையின்படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். இம் மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேஷ இராசியை விட்டு, ரிஷப இராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் ரிஷப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். 
ஓர் ஆண்டின் பன்னிரு மாதங்களை நான்கு பருவங்களாக வகுத்துள்ளனர்.  இளவேனிற்காலம் , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம்
சித்திரையும் வைகாசியும் வசந்த ருது- அதாவது இளவேனிற்காலம். உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதமான வைகாசியில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்.
வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள்.
 இந்த மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம், ஞானச் சிறப்பு பெற்றது. வைகாசி விசாகம் வேனிற்கால விழா நாள்; முருகனின் அவதார நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தவன் முருகன். சிவபெருமானின் ஆறு தலைகளிலும் 18 கண்கள் உண்டு. ஆனால் முருகன் தோன்றியதோ ஆறு தலைகளிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களால் மட்டுமே. நெற்றிக் கண்ணால் அரூபத்தைக் காண இயலும். சிவனின் நடுக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியமையால் அவன் ஆண் பிள்ளை. இந்தத் திருநாளில் முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Thursday, 3 May 2012

நரசிம்ம ஜெயந்தி

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள். அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும்.

தான் எவராலும் வெல்லப்படாதவனாக- என்றும், மரணமற்றவனாக வாழ வேண்டுமென்றும் மிக சாமர்த்தியமாக வரங்களைப் பெற்றான் இரண்யன். "பூமியிலோ வானத்திலோ எனக்கு மரணம் நிகழக் கூடாது; வீட்டிற்கு உள்ளேயோ வெளியிலோ மரணம் சம்பவிக்கக் கூடாது; இரவிலோ பகலிலோ உயிர் பிரியக்கூடாது; தேவர், மனிதர், அரக்கர், மிருகம், பறவை போன்ற உயிரினங்களால் மரணம் ஏற்படக் கூடாது; எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது” போன்ற வரங்களைப் பெற்றான்.

அதனால் உண்டான மமதையில் இறை நிந்தனை செய்து, "நாராயணனே கடவுள்” என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்துகொண்டு அவதரித்தார் நரசிங்கப் பெருமாள். இரண்யன் பெற்ற வரத்திற்குப் பொருந்தாத நரசிம்ம வடிவோடு, பகலும் இரவும் அற்ற அந்தி வேளையில், உள்ளேயோ வெளியிலோ என்றில்லாமல் வாயிற்படியில், தரையிலோ ஆகாயத்திலோ என்றில்லாமல் தன் மடியில் கிடத்தி, எவ்வித ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் தன் நகங்களாலேயே இரண்யன் வயிற்றைக் கிழித்தார். அவன் குடலை உருவி மாலையாக அணிந்துகொண்டு ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்து வதம் செய்தார்.

தாங்கொணா உக்கிரத்தோடு இருந்த அவரை சாந்தப்படுத்த பிரகலாதனை அவரருகே அனுப்பினர். சற்று சாந்தம் கொண்டார் பெருமாள். பின் லட்சுமி தேவியை அனுப்பினர். முற்றிலும் உக்கிரம் நீங்கிய பெருமாள் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக- லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். இவ்வாறு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில். அந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தி விழாவாக வைணவத் தலங்களில் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி சித்திரை வளர்பிறை சதுர்த்தசி திதியிலேயே வருவது சிறப்பு.

Monday, 23 April 2012

12 கருட சேவை

கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி 12 வைணவக் கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வரும் 24-ம் தேதி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 12 கருட சேவை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கருடசேவையில் கலந்து கொள்வர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளான அட்சய திருதியை அன்று ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து வழிபட்டால் குபேரனுக்கு இணையான பொன்னும், புகழும் வந்து சேரும் என பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியதாக ஐதீகம்.
நாட்டில் வறட்சி, வறுமைகள் ஒழியவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் செழிப்புடன் விளங்கவும் அட்சய திருதியை அன்று முன்னோர்கள் தொன்றுதொட்டு பெருமாளை வழிபடுவது மரபு.

அந்த வகையில் கோயில் நகரம், பாஸ்கர சேத்திரம், தென்னக அயோத்தி, பூலோகவைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக 12 கருட சேவை நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் கருடசேவை வரும் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது.

ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ராமஸ்வாமி, ஸ்ரீ ஆதிவராக பெருமாள், ஸ்ரீ ராஜகோபால சுவாமி, ஸ்ரீபட்டாபிராமர், சோலையப்பன்தெரு ஸ்ரீ ராமசுவாமி, ஸ்ரீ சந்தான கோபால சுவாமி, ஸ்ரீ வேணுகோபால சுவாமி, ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய 12 கோயில்களின் உ
ற்சவ பெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனத்தில் அந்தந்த கோயிலிலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளி 12 கருட சேவை ஒரே நேரத்தில் நடைபெறும்.

Monday, 2 April 2012

அட்சய திருதியை

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்: முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.

யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!

துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். 
கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. 

அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.
 அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:
 இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்:

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. 

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். 

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். 

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.  அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

சித்திரா பௌர்ணமி

சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதியும்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

 இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது. சித்திரா பௌர்ணமி  இவ் வருடம் மே மாதம் 05-ம் தேதி (05.05.2012)  அமைவதாக சோதிடம் சொல்லுகின்றது.

இத் தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது.  சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர குப்தன் விரதமும் அமைகின்றது. ஒவ்வொருவரும்  செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர குப்தன் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம்.  சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.