Friday, 23 March 2012

வசந்த நவராத்திரி

சக்தி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும்.

சக்தி வழிபாட்டில், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறுகிறது.
அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.

புரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியவையே .

நான்கு விதமான நவராத்திரிகள் :
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும். 

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை (22-03-2012) முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் (01-04-2012) முடியும்.

Friday, 16 March 2012

ஸ்ரீ ராம நவமி

"தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"
 - என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். 
           
        ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ஆகும்.

பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு.

ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.

அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.

ஸ்ரீராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.

ஸ்ரீராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வ தும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும்.

""பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது “ஸ்ரீராம்” என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவ பெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்"

என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்கு கிறது.

ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

“ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்”

ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.

Monday, 12 March 2012

பஞ்ச நந்திகள்

போக நந்தி: 
ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

பிரம்ம நந்தி: 
பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.

ஆன்ம நந்தி: 
பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.

மால்விடை: 
மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தரும நந்தி:
இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.

நந்தித் திருமணம்

சிலாத முனிவர்- சாருலட்சனை தம்பதிக்கு நெடுங்காலமாக புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார் சிலாதர். அவரது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் மழலை வரம் அருளினார். இறை அருளால் பிறந்த பிள்ளைக்கு நந்தி என பெயர் சூட்டி வளர்த்தனர்.

ஆனாலும் மகன் பிறந்த மகிழ்ச்சியை அத்தம்பதியால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஏனெனில் பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான்.

அந்தக் காலம் நெருங்க நெருங்க பெற்றோரின் கவலை அதிகரித்தது. இதை உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் கேட்க, வேறு வழியின்றி உண்மையைக் கூறினர். "கவலை வேண்டாம்' என்று அவர்களை ஆறுதல்படுத்திய நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்கொண்டான். சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றான். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றான்.

நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண் டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார். திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வர். இதைத்தான் "வருவது வைத்தியநாதன்பேட்டை; போவது புனல்வாசல்” என்பர். நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன. திருவேதிக்குடியிலிருந்து வேதியர்கள் வந்தனர். திருப்பழனத்திலிருந்து பழ வகைகள் வந்தன. திருப்பூந்துருத்தியிலிருந்து மலர் மாலைகள் வந்தன. திருநெய்த்தானத்திலிருந்து யாகத்திற்கும் சமையலுக்குமான நெய் வந்தது. திருச்சோற்றுத்துறையிலிருந்து அறுசுவை அன்ன வகைகள் வந்தன. இந்தத் தலங்களெல்லாம் திருமழபாடியைச் சுற்றி அமைந்துள்ளன.

இவ்வாண்டு இந்தத் திருமண விழா 31-3-2012 அன்று நடை பெறவுள்ளது. இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். "நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்” என்பது சொல்வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்; சுபகாரியங்களும் நடைபெறும் என்பர்.

பங்குனி உத்திரத்தின் மகிமை

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :
பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பங்குனி உத்திரத்திற்கு இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக அந்த நாளில் புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மனத பண்டிகைகளையும் கொண்டுள்ளது. அதோடு அல்லாமல் அன்று பெளர்ணமியும் உள்ளது.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்.

பங்குனி மாத சிறப்புகள்

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின் றன. 12-வது மாதமான பங்குனியும், 12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன்- அதாவது அதிபதி சூரியன்.

அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து  அனுஷ்டிக்கும் விரதம் இது.

சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப் பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.

அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.

ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக் கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கி யம் பெற்றாள். அத்துடன் மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள் மதுரையைப்போலவே.

தேவேந்திரன்- இந்திராணி, நான் முகன்- கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளை, பரதன்- மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அதுபோல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

சபரிமலை ஐயப்பன் அவதார தினம் இது. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும்; திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது.