Saturday 12 May 2012

வைகாசி மாதம்

தமிழர் காலக் கணிப்பு முறையின்படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். இம் மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேஷ இராசியை விட்டு, ரிஷப இராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் ரிஷப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். 
ஓர் ஆண்டின் பன்னிரு மாதங்களை நான்கு பருவங்களாக வகுத்துள்ளனர்.  இளவேனிற்காலம் , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம்
சித்திரையும் வைகாசியும் வசந்த ருது- அதாவது இளவேனிற்காலம். உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதமான வைகாசியில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்.
வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள்.
 இந்த மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம், ஞானச் சிறப்பு பெற்றது. வைகாசி விசாகம் வேனிற்கால விழா நாள்; முருகனின் அவதார நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தவன் முருகன். சிவபெருமானின் ஆறு தலைகளிலும் 18 கண்கள் உண்டு. ஆனால் முருகன் தோன்றியதோ ஆறு தலைகளிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களால் மட்டுமே. நெற்றிக் கண்ணால் அரூபத்தைக் காண இயலும். சிவனின் நடுக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியமையால் அவன் ஆண் பிள்ளை. இந்தத் திருநாளில் முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Thursday 3 May 2012

நரசிம்ம ஜெயந்தி

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள். அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும்.

தான் எவராலும் வெல்லப்படாதவனாக- என்றும், மரணமற்றவனாக வாழ வேண்டுமென்றும் மிக சாமர்த்தியமாக வரங்களைப் பெற்றான் இரண்யன். "பூமியிலோ வானத்திலோ எனக்கு மரணம் நிகழக் கூடாது; வீட்டிற்கு உள்ளேயோ வெளியிலோ மரணம் சம்பவிக்கக் கூடாது; இரவிலோ பகலிலோ உயிர் பிரியக்கூடாது; தேவர், மனிதர், அரக்கர், மிருகம், பறவை போன்ற உயிரினங்களால் மரணம் ஏற்படக் கூடாது; எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது” போன்ற வரங்களைப் பெற்றான்.

அதனால் உண்டான மமதையில் இறை நிந்தனை செய்து, "நாராயணனே கடவுள்” என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்துகொண்டு அவதரித்தார் நரசிங்கப் பெருமாள். இரண்யன் பெற்ற வரத்திற்குப் பொருந்தாத நரசிம்ம வடிவோடு, பகலும் இரவும் அற்ற அந்தி வேளையில், உள்ளேயோ வெளியிலோ என்றில்லாமல் வாயிற்படியில், தரையிலோ ஆகாயத்திலோ என்றில்லாமல் தன் மடியில் கிடத்தி, எவ்வித ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் தன் நகங்களாலேயே இரண்யன் வயிற்றைக் கிழித்தார். அவன் குடலை உருவி மாலையாக அணிந்துகொண்டு ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்து வதம் செய்தார்.

தாங்கொணா உக்கிரத்தோடு இருந்த அவரை சாந்தப்படுத்த பிரகலாதனை அவரருகே அனுப்பினர். சற்று சாந்தம் கொண்டார் பெருமாள். பின் லட்சுமி தேவியை அனுப்பினர். முற்றிலும் உக்கிரம் நீங்கிய பெருமாள் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக- லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். இவ்வாறு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில். அந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தி விழாவாக வைணவத் தலங்களில் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி சித்திரை வளர்பிறை சதுர்த்தசி திதியிலேயே வருவது சிறப்பு.