Sunday 21 August 2011

பழமொழி

'அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்'

இறைவனின் திருவடியை பற்றிக் கொண்டால் நமக்கு எல்லா வித நன்மைகளும் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.
அதாவது, இறைவனின் அடியை (திருவடியை) நாம் சரணடைந்தால் அதுவும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனே கதி என்று நாம் இருந்தால் நமக்கு எல்லா விதமான உதவிகளையும் இறைவன் நமக்குச் செய்வார்.


'ஆறிலும் சாவு; நூறிலும் சாவு'
 
மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் சரி; நூறு கௌரவர்களோடு
கர்ணன் இருந்திருந்தாலும் சரி, கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. அது விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

'பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை' 


அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையாரில் தொடங்கி குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் (ஆன்மீகம் மட்டுமல்ல அனைத்து நிகழ்ச்சிகளும்) விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கியே அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும், ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, இறுதியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்தும், கேட்டும் இருக்கலாம். இப்படி பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.

அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment