Wednesday 28 September 2011

கொலு பார்க்க எங்க வீட்டுக்கு வாங்க

நவராத்திரியின் போது தென்னிந்தியாவில் கொலு வைப்பது வழக்கம். 'அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!' என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள். 

திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

- என்ற பாடலுக்கேற்றாற்போல பலரும் தங்கள் வீட்டில் கொலு வைத்து, நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து, தங்கள் அமைத்த கொலுவை பார்க்க வைத்து வந்தவர்களுக்கு விருந்தோம்பலும் நடைபெறும்.
இதோ கொலு வைக்க உதவும் படிகளின் எண்ணிக்கையும் அதன் பொருளும்:
கீழிருந்து,
1 ஓரறிவு செடி, கொடி, மரங்கள், பூங்கா……
2 இரண்டறிவு நத்தை, சங்கு, ஊர்வன….
3 மூன்றறிவு எறும்பு – தரையில் ஊர்வன…
4 நான்கறிவு பறவை, வண்டு – பறப்பன
5 ஐந்தறிவு பசு போன்ற விலங்கினங்கள்
6 ஆறறிவு மனித பொம்மைகள், செட்டியார்
7 மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர்
8 தெய்வம் தசாவதாரம்
9 பூரண கும்பம் அம்பிகையின் திரு உருவம்.

அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.

புரட்டாசி மாதம் - நவராத்திரி

இதோ தொடங்கி விட்டது நவராத்திரி. நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் நவராத்திரி என்றும் மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தசரா என்றும்  வட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் விஜயதசமி எனவும் கொண்டாடப்படுகிறது. எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் கொண்டாடுவது என்னவோ மகாசக்தியான துர்கையைதான்.

மகிஷன் எனும் அசுரன் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரிடம் பெற்ற வரம் காரணமாக யாராலும் அழிக்க இயலாத வண்ணம் அவனது அராஜகம் இருந்தது.. அப்பொழுது அவனை அழிப்பதற்காக மும்மூர்த்திகளும் இணைந்து ஒரு ’சக்தி’யை உருவாக்கி அனுப்புகின்றனர். சக்தியான துர்கை 9 நாட்கள் மகிஷனுடன் சண்டையிட்டு 10வது நாளில் அவனை வெல்கிறாள். துர்கை மகிஷனுடன் போரிடும் 9 நாட்கள் நவராத்திரி அல்லது தசராவாகவும் 10 வது நாள் விஜயதசமியாகவும் (அதாவது தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக) கொண்டாடப்படுகிறது. பொதுவாக இப்பண்டிகை துர்கையை வழிபடும் பண்டிகை என்றாலும் தமிழ்நாட்டில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என முப்பெரும் தேவியரையும் இத்திருநாளில் வணங்குகின்றோம்.

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

Saturday 17 September 2011

புரட்டாசி சனிக்கிழமை


திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.ஏனெனில் இதுவே மகாவிஷ்ணு பூமியில் வெங்கடேசப் பெருமாளாக அவதரித்த மாதமாகும். அதனாலேயே திருப்பதியில் கூட இம்மாதமே பிரம்மோற்சவம் நடைப்பெறுகிறது. எம்பெருமான் வெங்கடேசப் பெருமாள் புரட்டாசி மாதத்தில் தனது பக்தர்கள் தனக்கு மிகவும் நெருங்கி வர வேண்டும் என விரும்புகிறார். ஆனால் அனைவரும் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு செல்வது என்பது இயலாதக் காரியம் என்பதால் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிப்படுகின்றனர். சிலர் தங்களது வீடுகளில் மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர். இது மட்டுமின்றி புரட்டாசி மாதம் சனி பகவானுக்கும் மிக ஏற்றதாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவான் தனது சக்தியை இழந்து விடுவதாகவும் அதனால் அச்சமயத்தில் அவரை வழிப்படுவது சிறந்த பலனைத் தரும் எனவும் நம்பப்படுகிறது. பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவ உணவைத் தவிர்த்து விரதமிருக்கின்றனர். சிலர் குறைந்தது புரட்டாசி சனிக்கிழமைகளிலாவது சுத்த சைவ உணவை உண்பது, ஒருப்பொழுது மட்டுமே உண்பது என தங்களால் இயன்றவரை விரதமிருக்கின்றனர். 

ஆன்மீகம் - புரட்டாசி மாதம்

இதோ வந்துவிட்டது (செப்டம்பர் 18) புரட்டாசி மாதம்.  புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என முன்பே பார்த்தோம். அதே போல புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். ஆம் எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற ஒலி முழங்கும். அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை, மிகவும் விசேஷம். திருப்பதியில் ’ஏழுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா, கோவிந்தா’ என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப, நம்முள்ளும் ஒரு அதிர்வு ஏற்பட்டு நாமும் ’கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கத்தில் நம்மையுமறியாமல் சேர்ந்துகொள்கிறோம்.

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
புராண்புருஷா கோவிந்தா…… என்ற பாடல் நம்மை ஈர்க்கிறது.

Monday 5 September 2011

ஓணம்

ஓணம் வந்நல்லோ........

ஓணம் கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும்.  பெருமாள் வாமன அவதாரம் எடுத்து  மகாபலி சக்ரவர்த்தியை ஆட்கொண்டதை நினைவு  படுத்தும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்திலும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இவ்விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம். ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று யானைகள் ஊர்வலம் ஆகும். யானைகள் தங்க கவசங்களாலும், பூதோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் 
ஊர்வலமாக அழைத்துவரப்படுகின்றன.

இந்த ஆண்டு (2011) செப்டம்பர் 9-ம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.