Wednesday 28 September 2011

புரட்டாசி மாதம் - நவராத்திரி

இதோ தொடங்கி விட்டது நவராத்திரி. நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் நவராத்திரி என்றும் மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தசரா என்றும்  வட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் விஜயதசமி எனவும் கொண்டாடப்படுகிறது. எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் கொண்டாடுவது என்னவோ மகாசக்தியான துர்கையைதான்.

மகிஷன் எனும் அசுரன் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரிடம் பெற்ற வரம் காரணமாக யாராலும் அழிக்க இயலாத வண்ணம் அவனது அராஜகம் இருந்தது.. அப்பொழுது அவனை அழிப்பதற்காக மும்மூர்த்திகளும் இணைந்து ஒரு ’சக்தி’யை உருவாக்கி அனுப்புகின்றனர். சக்தியான துர்கை 9 நாட்கள் மகிஷனுடன் சண்டையிட்டு 10வது நாளில் அவனை வெல்கிறாள். துர்கை மகிஷனுடன் போரிடும் 9 நாட்கள் நவராத்திரி அல்லது தசராவாகவும் 10 வது நாள் விஜயதசமியாகவும் (அதாவது தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக) கொண்டாடப்படுகிறது. பொதுவாக இப்பண்டிகை துர்கையை வழிபடும் பண்டிகை என்றாலும் தமிழ்நாட்டில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என முப்பெரும் தேவியரையும் இத்திருநாளில் வணங்குகின்றோம்.

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

No comments:

Post a Comment