Wednesday, 31 August 2011

சிவனின் திருவிளையாடல்கள்

பிட்டுக்கு மண் சுமந்த லீலை

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையிலுள்ள அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில் (மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் உள்ளது.) தான் நடைபெற்றது. வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகர் முழுவதும் அலைக்கழித்தது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டியன் உத்தரவிட்டான். இச்செய்தி மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்துக் கொண்டிருப்பவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்து விட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள்.. வெள்ளத்தை தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி என ஒதுக்கப்பட்டது. வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. இந்த தள்ளாத வயதில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதை அறிந்து கொண்ட சுந்தரேஸ்வரப் பெருமான் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன், கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார். பாட்டியும் ஒத்துக்கொண்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன் பிறகு, ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கு கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார் அந்த ஆடல்வல்லான் சிவபெருமான். ஆக, அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார்.

ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா? ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்? என்று கண்காணிப்பாளர் கண்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான். அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட லோகநாயகனான சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆனால் மன்னன் ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கிய எம்பெருமான் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்தார். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு வந்திறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், “தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தர விட்டிருக்கிறார். தாங்கள் எங்களுடன் வாருங்கள்” என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள்.

இந்த ஆண்டிற்கான பிட்டுக்கு மண் சுமந்த லீலை வரும் செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் 108 போற்றி

விநாயகர் சதுர்த்தி (1-Sep-2011) வந்துவிட்டது. விநாயகரை வழிபட உதவும் வகையில் இதோ உங்களுக்காக "விநாயகர் 108 போற்றி"
 
ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
ஓம் வாதாபி கணபதியே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினோய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்ற துணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதவிழுப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருளாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் ஆனைமுகத்தானே போற்றி
ஓம் ஒற்றைக்கொம்பனே போற்றி
ஓம் வேழமுகத்தானே போற்றி
ஓம் வரமருள் வள்ளலே போற்றி
ஓம் காலத்தை வென்றாய் போற்றி
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி
ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
ஒம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி
ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஒம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி
ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!! 

Sunday, 28 August 2011

ராகு காலம் மற்றும் எமகண்டம்

ஜோதிட சாஸ்திர விதிப்படி, ராகு காலத்தில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாது; எமகண்டத்தில் கெட்டகாரியங்கள் செய்யக்கூடாது.

ராகு காலத்தில் தங்க நகை வாங்குதல், பட்டு ஆடைகள் வாங்குதல், திருமணம் அல்லது வீடு வாங்கிட பேச்சை ஆரம்பித்தல், சொத்துக்கள் வாங்குதல், புதிய நிறுவனம் ஆரம்பித்தல் கூடாது. இதை மீறிச்செய்தால் அந்த காரியங்கள் வெற்றி பெறாது. ஏனெனில், ஜோதிடப்படி நவக்கிரகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி. ஆனால், ராகு மற்றும் கேதுவுக்கு என தனிக்கிழமைகள் ஒதுக்கப்படவில்லை.

ஆகையால் வார நாட்களில் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை ராகு பகவான் ஆளுகிறார்.

மேலே சொன்னவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வெனில், ராகு திசை நடக்கும் ஜாதகர்களுக்கும், திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மேலே சொன்ன விதிகள் பொருந்தாது.
இவர்கள் ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்யலாம். காதலிக்கத் தொடங்க(!?!), திருமணப்பேச்சு எடுக்க, சொத்துக்கள் வாங்கிட, புதிய நிறுவனங்கள் வாங்கிட, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பட்டு ஆடைகள், செல்போன், வாகனங்கள் என எதையும் வாங்கிட மிக நன்று.

எமகண்டத்தில் கெட்டது செய்யக்கூடாது. அதென்ன கெட்டது. . . நமக்குப்பிடிக்காத நமது சக ஊழியரைப்பற்றி இன்னொரு ஊழியரிடம் போட்டுக்கொடுப்பது, மேலதிகாரியிடம் போட்டுக்கொடுப்பது, போன்றவற்றை செய்ய ஆரம்பிக்கக்கூடாது.

ஆசை (பற்று)

நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை; இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. ஆக நாம் எந்த ஒரு பொருளின் மீதும் பற்று வைக்காமல் இறைவனையே எண்ணி சரணாகதி அடைவோமாக!!!

ஆசை (பற்று) வைக்கவேண்டும் பொருள் மீது அல்ல; பரம்பொருள் மீது.
நம் எண்ணங்களை சிதற விடாமல், பரம்பொருள் மீது மட்டுமே அதிக பற்று வைத்து இறைவனின் அருளைப் பெறுவோமாக!

ஆவணி ஞாயிறு

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க, கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை” முக்கியத்துவம் பெற்றது. "ஞாயிறு” என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

Sunday, 21 August 2011

பழமொழி

'அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்'

இறைவனின் திருவடியை பற்றிக் கொண்டால் நமக்கு எல்லா வித நன்மைகளும் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.
அதாவது, இறைவனின் அடியை (திருவடியை) நாம் சரணடைந்தால் அதுவும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனே கதி என்று நாம் இருந்தால் நமக்கு எல்லா விதமான உதவிகளையும் இறைவன் நமக்குச் செய்வார்.


'ஆறிலும் சாவு; நூறிலும் சாவு'
 
மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் சரி; நூறு கௌரவர்களோடு
கர்ணன் இருந்திருந்தாலும் சரி, கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. அது விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

'பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை' 


அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையாரில் தொடங்கி குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் (ஆன்மீகம் மட்டுமல்ல அனைத்து நிகழ்ச்சிகளும்) விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கியே அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும், ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, இறுதியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்தும், கேட்டும் இருக்கலாம். இப்படி பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.

அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

Sunday, 14 August 2011

விநாயகர் சதுர்த்தி


விநாயகருக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஹேரம்பன், லம்போதரர், குகாக்கிரசர், ஸ்கந்தபூர்வஜர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கஜமுகன், ஓங்காரன், பிரணவன், மஹோட்கடன் என்று பல பெயர்கள் உண்டு.

ஆவணி மாதம் சுக்கில பட்சத்தில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடப்படுகிறது.

பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு ஒரு தலைவாழை இலை போடவேண்டும். இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி மேலே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ, ஜாதிமல்லி போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு, தேங்காய் பூரணம் வைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) விநாயகருக்குப் படைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைக்குள் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெளியே இருக்கும் மாவு இந்த உலகத்தைக் குறிக்கிறது. உள்ளே இருக்கும் பூரணம்தான் இறைவன். இந்த உலக வாழ்க்கை என்ற மாயையைத் துறந்தால், 'இறைவன்' என்ற பூரணத்தை அடையலாம். கொழுக்கட்டையோடு அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய் போன்றவற்றையும் படைக்கலாம். பிறகு 108 விநாயக அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

மாலையில் அல்லது விநாயகர் சதுர்த்திக்கு மூன்றாம் நாள் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தயிர்சாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்! 

நிவேதனமாக, மோதகம், கடலைப் பருப்பு கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை, உளுத்தங் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.