Monday 23 April 2012

12 கருட சேவை

கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி 12 வைணவக் கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வரும் 24-ம் தேதி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 12 கருட சேவை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கருடசேவையில் கலந்து கொள்வர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளான அட்சய திருதியை அன்று ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து வழிபட்டால் குபேரனுக்கு இணையான பொன்னும், புகழும் வந்து சேரும் என பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியதாக ஐதீகம்.
நாட்டில் வறட்சி, வறுமைகள் ஒழியவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் செழிப்புடன் விளங்கவும் அட்சய திருதியை அன்று முன்னோர்கள் தொன்றுதொட்டு பெருமாளை வழிபடுவது மரபு.

அந்த வகையில் கோயில் நகரம், பாஸ்கர சேத்திரம், தென்னக அயோத்தி, பூலோகவைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக 12 கருட சேவை நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் கருடசேவை வரும் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது.

ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ராமஸ்வாமி, ஸ்ரீ ஆதிவராக பெருமாள், ஸ்ரீ ராஜகோபால சுவாமி, ஸ்ரீபட்டாபிராமர், சோலையப்பன்தெரு ஸ்ரீ ராமசுவாமி, ஸ்ரீ சந்தான கோபால சுவாமி, ஸ்ரீ வேணுகோபால சுவாமி, ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய 12 கோயில்களின் உ
ற்சவ பெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனத்தில் அந்தந்த கோயிலிலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளி 12 கருட சேவை ஒரே நேரத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment