Thursday, 12 January 2012

ஆருத்ரா தரிசனம்


” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்... “ எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும். திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான். இருப்பினும் சிவாலயங்களில் மிகமுக்கியமானது ஆருத்ரா தரிசனம். கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.


அந்த காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”  என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.

நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்' என்பர். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. "முசலகம்' என்றால், "காக்கா வலிப்பு!' இதனால், அவன், "முசலகன்' என்றாகி, தமிழில் முயலகன் ஆனான். முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன். மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பது இதன் தத்துவம். இடது காலை, "குஞ்சிதபாதம்' என்பர். "குஞ்சிதம்' என்றால், "வளைந்து தொங்குதல்' எனப் பொருள். ஆம்... அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.

திருவாதிரை களி
 
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே, தான் உணவருந்துவார்.


ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின; அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தடைந்தார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.


மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.


எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.


சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

No comments:

Post a Comment