Thursday, 12 January 2012

தை அமாவாசை

இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூசை செய்வர்.

 கடல்கூடும் கன்னியாகுமரி, இராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.

அமாவாசையன்று தோன்றிய முழு நிலவு

திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகையை தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன திதி? என்று கேட்டார். அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். . உடனே அரசன் அது "மதி கெட்ட தினம்" ( சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால் உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.

திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல். தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள். அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில்  அமர்ந்து அபிராமி அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து  துவக்கினார் . ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒரு கயறு சிப்பாய்கள் அறுத்தனர் . 100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால், நூறு கயரும் அரக்கப் படும். பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும். அந்தாதியாவது நூலின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகிய இவற்றுள் யாதேனும் ஒன்று அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் முடிவும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றாக இணையும்படி மண்டலத்து மாலை போலத் தொடுத்துப் பாடப்பெறும் ஒருவகைச் சிற்றியலக்கியமாகும். உதாரணமாக இந்த அபிராமி அந்தாதியில் 100-வது பாடலானது 'குழையைத் தழுவிய' என்று ஆரம்பித்து 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' என முடிகிறது. அபிராமி அந்தாதியின் முதல் பாடலோ 'உதிக்கின்ற' என ஆரம்பிக்கிறது. மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார். அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும்.

No comments:

Post a Comment