Tuesday 24 January 2012

சூரிய ஜெயந்தி

தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது. சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, "சப்தமி திதி' என்கிறோம். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர்.

சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான்.

உத்தராயண புண்ணிய காலம்

தைமாதம் முதல் நாள் முதல் ஆனி மாதம் நிறைவு நாள் வரையான காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகின்றது. கோவில் கும்பாபிஷேகம் முதலான புண்ணிய காரியங்களுக்கும். கல்யாணம் முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த காலம். மறுமைப் பேறு, நற்கதி அடையவும் உகந்த காலம், வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருக்கும் காலம் என்பது ஐதீகம். உத்தராயணத்தின் முதல் நாள் மகர சங்கராந்தி தலை சிறந்த புண்ணிய நாள். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சபதம் செய்து காலம் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்த பீஷ்ம பிதாமகர், தம் தந்தை அளித்த வரத்தின் படி மோக்ஷம் பெற காத்திருந்த காலம் உத்தராயண புண்ணிய காலம்.

இரத சப்தமி

உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதமான தை மாத வளர்பிறை ஏழாம் நாள் அதாவது சப்தமி சூரியனுக்கு உரிய இரத சப்தமி என்று கொண்டாடப் படுகின்றது.

இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு. வெள்ளை ஒளியில் ஏழு நிறங்கள் அது போலவே சூரிய இரதத்தில் ஏழு குதிரைகள். எனவேதான் ஏழாம் நாள் என்பதால் சூரியனுக்கு உரிய நாளாக அமைத்தனரோ முன்னோர். இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

இரதத்தை எப்படி செழுமையாக செலுத்த வேண்டுமோ அது போல ஐம்புலன்களால் பல் வேறு திசைகளில் இழுக்கப்பட்டு தடுமாறும் மனத்தை இறைவனிடம் செழுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இரத சப்தமி நாள்.

எருக்கம் இலை

தலையில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கும் நாள். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம். பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து உத்தராயண காலத்திற்கு காத்துக் கொண்டு இருந்த போது வியாசர் அங்கே வர, தான் இவ்வாறு அம்பு படுக்கையில் கிடந்து அல்லல் படுவதற்கான காரணத்தை வினவ. வியாசர் பதிலிறுக்கின்றார், துரியோதனன் சபையில் பாஞ்சாலியை அவமானப்படுத்த துச்சாதானன் முயன்ற போது பிரம்ம்ச்சரிய விரதம் பூண்ட நீதிமானான தாங்கள் தடுக்காததால் ஏற்பட்ட பாவத்திற்க்கான தண்டனை இது என்றார். ஆம் என்று ஆமோதித்த கங்கை மைந்தர் என்ன்டைய தேகத்தை சூரிய கதிரினால் எரித்து சுத்தம் செய்யுங்கள் என்று வேண்ட எருக்கம் இலைகளால் உடல் முழுவதும் தடவி சுத்தம் செய்தார் வியாசர்.

எருக்கம் இலை அர்க்க பத்திரம் என்று அறியப்படுகின்றது. அருக்கன் என்றால் சூரியன். எருக்கம் இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் சந்திரனை ஜடாமுடியில் தாங்கும் சிவ பெருமான் எருக்கை சூரியனாக அணிகின்றார்.

ஏழு சுரங்கள் கொண்ட இசை எவ்வாறு மனதை ஒருமைப்படுத்துகின்றதோ அது போல ஏழு நிறங்களால் ஆன சூரியனின் கிரணங்களை எருக்கம் இலை ஈர்த்து மனதை ஒருமைப்படுத்துகின்றது, எனவே இறைவன் திருவடியில் ஒன்றலாம் என்பதை உணர்த்தும் நாள்.

சூரிய நாராயணர்

சகல ஜீவராசிகளையும் தன் ஒளிக் கதிரால் வாழ்விப்பவன் சூரியன், அது போல சகல ஜீவராசிகளையும் காப்பவர் நாராயணன். எனவே சூரியனுக்கும் விஷ்ணுவுக்கும் வித்தியாசம் இல்லை. எனவே சூரிய பகவான் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றார். இவ்வாறு அழைக்கபப்டுவதற்கு ஒரு காரணமும் உண்டு பெருமாளின் வாகனம் வேத சொரூபி கருடன். கருடன் சிறந்த அழகு பொருந்திய சிறகுகளை உடையவன் ஆதலால் கருத்மான் என்றும் அழைக்கப் படுகின்றான். கருடனுடைய இரு சிறகுகள் உத்திராயணம் மற்றும் தக்ஷிணாயனம் ஆகும். அவன் பறக்கும் போது பகலும் இரவும் மாறி மாறி உண்டாகிறது. இவ்வாறு கால புருஷனை நடத்துபவர் விஷ்ணு. இவர் கருட வாகனத்தில் வருவதால் சூரியன் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப் படுகின்றார். எனவே தான் விஷ்ணுவுக்குரிய சங்கும் சக்கரமும் ஏந்தி சூரியனும் அருள் பாலிக்கின்றார். சூரியனும் வேத சொரூபம் காலையில் ரிக் வேதமாகவும், நன்பகலில் யஜுர் வேதமாகவும், மாலையில் சாம வேதமாகவும் ஒளிர்கின்றார் சூரிய நாராயணர்.

No comments:

Post a Comment