Monday 12 March 2012

நந்தித் திருமணம்

சிலாத முனிவர்- சாருலட்சனை தம்பதிக்கு நெடுங்காலமாக புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார் சிலாதர். அவரது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் மழலை வரம் அருளினார். இறை அருளால் பிறந்த பிள்ளைக்கு நந்தி என பெயர் சூட்டி வளர்த்தனர்.

ஆனாலும் மகன் பிறந்த மகிழ்ச்சியை அத்தம்பதியால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஏனெனில் பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான்.

அந்தக் காலம் நெருங்க நெருங்க பெற்றோரின் கவலை அதிகரித்தது. இதை உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் கேட்க, வேறு வழியின்றி உண்மையைக் கூறினர். "கவலை வேண்டாம்' என்று அவர்களை ஆறுதல்படுத்திய நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்கொண்டான். சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றான். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றான்.

நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண் டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார். திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வர். இதைத்தான் "வருவது வைத்தியநாதன்பேட்டை; போவது புனல்வாசல்” என்பர். நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன. திருவேதிக்குடியிலிருந்து வேதியர்கள் வந்தனர். திருப்பழனத்திலிருந்து பழ வகைகள் வந்தன. திருப்பூந்துருத்தியிலிருந்து மலர் மாலைகள் வந்தன. திருநெய்த்தானத்திலிருந்து யாகத்திற்கும் சமையலுக்குமான நெய் வந்தது. திருச்சோற்றுத்துறையிலிருந்து அறுசுவை அன்ன வகைகள் வந்தன. இந்தத் தலங்களெல்லாம் திருமழபாடியைச் சுற்றி அமைந்துள்ளன.

இவ்வாண்டு இந்தத் திருமண விழா 31-3-2012 அன்று நடை பெறவுள்ளது. இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். "நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்” என்பது சொல்வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்; சுபகாரியங்களும் நடைபெறும் என்பர்.

No comments:

Post a Comment