Friday, 16 March 2012

ஸ்ரீ ராம நவமி





"தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"
 - என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். 
           
        ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ஆகும்.

பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு.

ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.

அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.

ஸ்ரீராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.

ஸ்ரீராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வ தும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும்.

""பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது “ஸ்ரீராம்” என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவ பெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்"

என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்கு கிறது.

ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

“ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்”

ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.

No comments:

Post a Comment