Tuesday 21 February 2012

காரடையான் நோன்பு (சாவித்ரி விரதம் )

கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து இல்லற தர்மங்களை கடைபிடிப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. மனைவி, மக்களை பாதுகாத்து அற வாழ்வு நடத்தி வரும் குடும்பத் தலைவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இல்லற தர்மத்தை சிறப்பாக கடைபிடிக்கிற வகையில் தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிற வகையில் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள் ‘கர்வா சவுத்’ எனப்படுகிறது.மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் தமிழகத்தில் இது ‘காரடையான் நோன்பு’ என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் முழுக்க முழுக்க பெண்கள் தொடர்பான விரதம். தங்கள் மாங்கல்ய பலம் கூடுவதற்காக பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு.

சத்யவான், சாவித்ரி கதையே இந்த விரதம் தோன்ற காரணமானது.அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவான். சொத்து, சுகங்கள் அனைத்தையும் இழந்ததால் காட்டில் விறகு வெட்டி வந்தான். அவனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள் சாவித்ரி. இருவரும் காட்டிலேயே வாழ்ந்து வந்தனர்.இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது. சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்றும், இன்னும் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தாள் சாவித்ரி. கணவனின் நீண்ட ஆயுளுக்காக காட்டிலேயே விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாள் வந்தது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தனது விரதத்தை முடித்திருந்த தினம் அன்று. மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கிற நேரம். மங்களகரமான அந்த நேரத்தில் தனது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி சாவித்ரி விரதம் முடித்திருந்தாள்.
அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.
நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன், என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, நண்பரே! என்றாள்.நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,ஒருவன் மற்றொருவனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், ‘தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைத் தருகிறேன் கேள். ஆனால் எடுத்த உயிரை கொடுக்க வாய்ப்பில்லை. வேறு ஏதாவது வரம் கேள் தருகிறேன்’ என்றான். சாவித்ரி சாதுர்யமாக ‘வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்’ என்றாள்.

உயிருடன் போகும் அவசரத்தில் இருந்த எமன் சற்றும் யோசிக்காமல், ‘கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்து அருளி புறப்பட்டான். ‘‘தர்மராஜரின் வாக்கு பலிக்க வேண்டும். வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்’’ என்றாள் சாவித்ரி. அவளது பதி பக்தியையும் சாதுர்யத்தையும் எண்ணி வியந்தான் எமதர்மன். சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான். நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினான். காட்டிலேயே சாவித்ரி மண்ணை பிசைந்து அடைகளாக தட்டினாள். காமாட்சி அம்மனை நினைத்து படைத்து அதையே உண்டு விரதத்தை முடித்தாள். இதன் அடிப்படையிலேயே மண்சோறு உண்ணும் வழக்கம் வந்தது.
இதை நினைவுகூரும் வகையில் முதல் போகத்தில் விளையும் நெல்லை குத்தி (கார் அரிசி) அதில் அடை செய்து அம்பாளுக்கு படைத்து வழிபடுகின்றனர் பெண்கள். இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய், பூ, மாலை சாத்தி பட்டுத்துணி சுற்றி வைக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு காமாட்சி அம்மனை வழிபட்டு, விரதத்தை முடிப்பார்கள். பின்னர் மஞ்சள் சரடு அணிவார்கள். தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பு. சிவபெருமானுக்காக உப்பு அடையும் பார்வதி தேவிக்காக வெல்ல அடையும் நிவேதனம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம். இன்று மாலைக்கு பிறகு பங்குனி மாதம் பிறப்பதால் மாலை வேளையில் நோன்பை முடித்து சரடு கட்டிக்கொள்ளலாம். இந்த நோன்பு பூஜையை செய்வதால், கணவன், மனைவி இடையே இருக்கும் பூசல்கள் மறையும். ஜாதகத்தில் அஷ்டம ஸ்தான கிரக தோஷங்கள் நீங்கும். பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்ய தடை நீங்கி வம்சம் துளிர்க்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment