Tuesday, 21 February 2012

மகா சிவராத்திரி

சிவம் என்ற சொல்லுக்கு ' சுகம்' என்ற பொருள் உண்டு. சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மஹா பிரளய வெள்ளத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே 'மகா சிவராத்திரி ' என்று சைவ சமயம் கூறுகின்றது. 

வருடந்தோறும், மாசி மாத கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் சிவராத்திரி தினமாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 

 
ஐந்து வகை சிவராத்திரி:
நித்திய சிவராத்திரி : ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்து, ஒரு வருடத்தில் இருபத்திநான்கு சிவராத்திரி பூஜை புரிவது நித்திய சிவராத்திரி. 

பட்ச சிவராத்திரி : தை மாதம் கிருஷ்ண பிரதமை முதல் பதின்மூன்று நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு, சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி. 

மாத சிவராத்திரி : தை மாதத்தில் சுக்ல திருதியை, மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில், முதலில் வரும் திருதியை, சித்திரையில் கிருஷ்ண அஷ்டமி, வைகாசி மாதம் முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பட்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும் அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்தசிகள் ஆகிய இவை அனைத்தும் மாத சிவராத்திரிகள்.

யோக சிவராத்திரி : சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.

மகா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி இரவு மகா சிவராத்திரி புண்ணிய காலமாகும். அன்றைய தினம் இரவு கடைசி பதினான்கு நாழிகை ( ஐந்து மணி முப்பத்தாறு நிமிடங்கள் ) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

இனி சிவராத்திரியின் மகிமையை ப் பற்றி பார்ப்போம்:

அகிலலோக நாயகி பார்வதிதேவி ஆடல் நாயகனாம் சிவபெருமானுடன் விளையாடச் சித்தம் கொண்டாள். ஒருமுறை, விளையாட்டாக அன்னை, சிவபெருமானின் இரு கண்களையும் தன் கரங்களால் மூடிக்கொண்டாள். சிவனின் இரு கண்களாகத் திகழும் சூரியனையும், சந்திரனையும் மறைத்து விட்டால், உலகில் ஒளியேது? அகிலம் ( உலகம் ) முழுவதும் கணப்பொழுதில் இருண்டு போனது. 

நட்சத்திரங்களின் ஒளிகூட இல்லாமல், உலகை இருள் சூழ்ந்து கொண்டது. அந்த நாளே ' சிவராத்திரி' என அழைக்கப்படுகிறது. 

ஒளி வேண்டி அனைத்து உயிர்களும் சிவனை வேண்ட, உலகுக்கு ஒளி கொடுப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். வெப்பக்கனலாக வீசிய நெற்றிக்கண்ணின் ஒளி கண்டு பார்வதி தேவியே நடுநடுங்கினாள். அம்பிகையைக் கருணையுடன் நோக்கிய சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய வெப்ப ஒளியைக் குளிர்நிலவாக்கி, அன்னையையும், தம் அடியவர்களையும் ஆட்கொண்டார். உலகுக்கு ஒளியேற்றிய  சிவனுக்கு, அந்த நன்னாளில் நெய் தீபமேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது பெரியோர் வாக்கு. 


ஒரு வேடன் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு புலி அவனை விரட்டியது. ஓடிச் சென்று அவன் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். அது ஒரு வில்வ மரம். மரத்தின் கீழே, புலி படுத்துக் கொண்டது. செய்வதறியாமல் திகைத்த வேடன், பொழுதைக் கழிக்கவும், தூக்கத்தை விலக்கவும் ( தூங்கினால், கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவேனோ என்று பயந்து ) அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். 

கீழே விழுந்த இலைகள், அந்த மரத்தினடியில் இருந்த சிவ லிங்கத்தின்மேல் விழுந்தன. வேடன் தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்த அந்தச் செயல், சிவனுக்குரிய அர்ச்சனையாக மாறி, அவனுக்குச் சிவனின் அருள் கிடைத்தது. அன்று சிவராத்திரியாதலால், கண் விழித்துப் பூஜை செய்த பயனும் கிடைத்தது. அதனால், வேடனின் பாவங்கள் நீங்கி, முத்தி பெற்றான். 

சிவராத்திரியன்று முழு இரவும் கண்விழித்துச் சிவபெருமானைப் போற்றி வழிபாடு செய்து, அவரது அருள் பெற்று வாழ்வோமாக!!!

1 comment:

 1. எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
  இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

  எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
  நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?

  "பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
  http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

  ReplyDelete