Wednesday 11 May 2011

மகாத்மா காந்தியடிகள் சொன்ன ஆன்மீகம்...



மகானின் சில ஆன்மீக சிந்தனைகள்:


·        பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.
·        கீதையை வழிபாடு செய்வது என்பது கிளிப்பிள்ளை போல பாராயணம் செய்வது அல்ல. அதன் உபதேசப்படி நடப்பதே கீதையைப் பின்பற்றுவதாகும். கண்ணன் காட்டிய வழியில் நடப்பதற்கு வழிகாட்டியாக கீதையை படிக்க வேண்டும்.
·        வழிபாடு உண்மையானதாக இருக்க வேண்டும். வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் வழிபாட்டில் லயிக்க வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற பரிபூரணமான கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட வேண்டும்.
·        சத்தியமே நான் கடைபிடிக்கும் மதம். அகிம்சையே அதற்கான வழி. அறிவையும் விட சத்தியம் மேலானதாகும். யார் ஒருவன் ஆணவமே இல்லாமல் பணிவின் இருப்பிடமாகத் திகழ்கிறானோ அவனே சத்தியத்தை காண்கின்ற பாக்கியத்தைப் பெறுவான்.
·        உண்மையாக நடக்க விரும்புகிறவன் தனது தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒப்புக் கொள்ளவும், அதற்கு பரிகாரம் தேடிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். 
·        நான் வழிபாடு செய்யும் ராமன் இறப்பும் பிறப்பும் இல்லாதவன். ஈடுஇணையில்லாத பெருமை உள்ளவன். அவன் திருவடிகளையே எப்போதும் வணங்குகிறேன். ராமவழிபாடு எல்லாருக்கு உகந்த வழிபாடாகும்.
·        ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று. அதன் உட்பொருளை உணர்ந்து மனத்தூய்மையோடு சொல்பவர்கள் சாதனைகள் பல புரிந்து நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
·        இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.
·        எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும். ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
·        ராமநாமத்தை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தலாமே அன்றி, ஒருபோதும் தீமைக்கு பயன்படுத்துதல் கூடாது. அப்படி பயன்படுத்துபவர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.
·        உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு. 

No comments:

Post a Comment