Wednesday, 28 September 2011

கொலு பார்க்க எங்க வீட்டுக்கு வாங்க

நவராத்திரியின் போது தென்னிந்தியாவில் கொலு வைப்பது வழக்கம். 'அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!' என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள். 

திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

- என்ற பாடலுக்கேற்றாற்போல பலரும் தங்கள் வீட்டில் கொலு வைத்து, நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து, தங்கள் அமைத்த கொலுவை பார்க்க வைத்து வந்தவர்களுக்கு விருந்தோம்பலும் நடைபெறும்.
இதோ கொலு வைக்க உதவும் படிகளின் எண்ணிக்கையும் அதன் பொருளும்:
கீழிருந்து,
1 ஓரறிவு செடி, கொடி, மரங்கள், பூங்கா……
2 இரண்டறிவு நத்தை, சங்கு, ஊர்வன….
3 மூன்றறிவு எறும்பு – தரையில் ஊர்வன…
4 நான்கறிவு பறவை, வண்டு – பறப்பன
5 ஐந்தறிவு பசு போன்ற விலங்கினங்கள்
6 ஆறறிவு மனித பொம்மைகள், செட்டியார்
7 மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர்
8 தெய்வம் தசாவதாரம்
9 பூரண கும்பம் அம்பிகையின் திரு உருவம்.

அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.

புரட்டாசி மாதம் - நவராத்திரி

இதோ தொடங்கி விட்டது நவராத்திரி. நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் நவராத்திரி என்றும் மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தசரா என்றும்  வட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் விஜயதசமி எனவும் கொண்டாடப்படுகிறது. எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் கொண்டாடுவது என்னவோ மகாசக்தியான துர்கையைதான்.

மகிஷன் எனும் அசுரன் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரிடம் பெற்ற வரம் காரணமாக யாராலும் அழிக்க இயலாத வண்ணம் அவனது அராஜகம் இருந்தது.. அப்பொழுது அவனை அழிப்பதற்காக மும்மூர்த்திகளும் இணைந்து ஒரு ’சக்தி’யை உருவாக்கி அனுப்புகின்றனர். சக்தியான துர்கை 9 நாட்கள் மகிஷனுடன் சண்டையிட்டு 10வது நாளில் அவனை வெல்கிறாள். துர்கை மகிஷனுடன் போரிடும் 9 நாட்கள் நவராத்திரி அல்லது தசராவாகவும் 10 வது நாள் விஜயதசமியாகவும் (அதாவது தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக) கொண்டாடப்படுகிறது. பொதுவாக இப்பண்டிகை துர்கையை வழிபடும் பண்டிகை என்றாலும் தமிழ்நாட்டில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என முப்பெரும் தேவியரையும் இத்திருநாளில் வணங்குகின்றோம்.

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

Saturday, 17 September 2011

புரட்டாசி சனிக்கிழமை


திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.ஏனெனில் இதுவே மகாவிஷ்ணு பூமியில் வெங்கடேசப் பெருமாளாக அவதரித்த மாதமாகும். அதனாலேயே திருப்பதியில் கூட இம்மாதமே பிரம்மோற்சவம் நடைப்பெறுகிறது. எம்பெருமான் வெங்கடேசப் பெருமாள் புரட்டாசி மாதத்தில் தனது பக்தர்கள் தனக்கு மிகவும் நெருங்கி வர வேண்டும் என விரும்புகிறார். ஆனால் அனைவரும் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு செல்வது என்பது இயலாதக் காரியம் என்பதால் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிப்படுகின்றனர். சிலர் தங்களது வீடுகளில் மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர். இது மட்டுமின்றி புரட்டாசி மாதம் சனி பகவானுக்கும் மிக ஏற்றதாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவான் தனது சக்தியை இழந்து விடுவதாகவும் அதனால் அச்சமயத்தில் அவரை வழிப்படுவது சிறந்த பலனைத் தரும் எனவும் நம்பப்படுகிறது. பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவ உணவைத் தவிர்த்து விரதமிருக்கின்றனர். சிலர் குறைந்தது புரட்டாசி சனிக்கிழமைகளிலாவது சுத்த சைவ உணவை உண்பது, ஒருப்பொழுது மட்டுமே உண்பது என தங்களால் இயன்றவரை விரதமிருக்கின்றனர். 

ஆன்மீகம் - புரட்டாசி மாதம்

இதோ வந்துவிட்டது (செப்டம்பர் 18) புரட்டாசி மாதம்.  புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என முன்பே பார்த்தோம். அதே போல புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். ஆம் எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற ஒலி முழங்கும். அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை, மிகவும் விசேஷம். திருப்பதியில் ’ஏழுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா, கோவிந்தா’ என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப, நம்முள்ளும் ஒரு அதிர்வு ஏற்பட்டு நாமும் ’கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கத்தில் நம்மையுமறியாமல் சேர்ந்துகொள்கிறோம்.

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
புராண்புருஷா கோவிந்தா…… என்ற பாடல் நம்மை ஈர்க்கிறது.

Monday, 5 September 2011

ஓணம்

ஓணம் வந்நல்லோ........

ஓணம் கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும்.  பெருமாள் வாமன அவதாரம் எடுத்து  மகாபலி சக்ரவர்த்தியை ஆட்கொண்டதை நினைவு  படுத்தும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்திலும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இவ்விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம். ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று யானைகள் ஊர்வலம் ஆகும். யானைகள் தங்க கவசங்களாலும், பூதோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் 
ஊர்வலமாக அழைத்துவரப்படுகின்றன.

இந்த ஆண்டு (2011) செப்டம்பர் 9-ம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Wednesday, 31 August 2011

சிவனின் திருவிளையாடல்கள்

பிட்டுக்கு மண் சுமந்த லீலை

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையிலுள்ள அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயிலில் (மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் உள்ளது.) தான் நடைபெற்றது. வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகர் முழுவதும் அலைக்கழித்தது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டியன் உத்தரவிட்டான். இச்செய்தி மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்துக் கொண்டிருப்பவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்து விட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள்.. வெள்ளத்தை தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி என ஒதுக்கப்பட்டது. வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. இந்த தள்ளாத வயதில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதை அறிந்து கொண்ட சுந்தரேஸ்வரப் பெருமான் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன், கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார். பாட்டியும் ஒத்துக்கொண்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன் பிறகு, ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கு கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார் அந்த ஆடல்வல்லான் சிவபெருமான். ஆக, அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார்.

ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா? ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்? என்று கண்காணிப்பாளர் கண்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான். அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட லோகநாயகனான சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆனால் மன்னன் ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கிய எம்பெருமான் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்தார். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு வந்திறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், “தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தர விட்டிருக்கிறார். தாங்கள் எங்களுடன் வாருங்கள்” என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள்.

இந்த ஆண்டிற்கான பிட்டுக்கு மண் சுமந்த லீலை வரும் செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் 108 போற்றி

விநாயகர் சதுர்த்தி (1-Sep-2011) வந்துவிட்டது. விநாயகரை வழிபட உதவும் வகையில் இதோ உங்களுக்காக "விநாயகர் 108 போற்றி"
 
ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
ஓம் வாதாபி கணபதியே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினோய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்ற துணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதவிழுப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருளாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் ஆனைமுகத்தானே போற்றி
ஓம் ஒற்றைக்கொம்பனே போற்றி
ஓம் வேழமுகத்தானே போற்றி
ஓம் வரமருள் வள்ளலே போற்றி
ஓம் காலத்தை வென்றாய் போற்றி
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி
ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
ஒம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி
ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஒம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி
ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!!