Monday 19 December 2011

திருவெம்பாவை முதற்பாடல்


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வனசெவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

மார்கழி மாதம்


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
                                                                      - திருப்பாவை முதற்பாடல்

 என்று தொடங்கிவிட்டது மார்கழி மாதம். இம்மாதத்தின் முக்கிய விரதமாக கடைபிடிக்கப்படுவது பாவை நோன்பு.
 

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும்,  தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை படிக்க வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

மார்கழியில் அமைந்த மிக முக்கியமான வழிபாடு 4.

1. மார்கழி நோன்பு - பாவை நோன்பு
2. வைகுண்ட ஏகாதசி
3. திருவாதிரை
4. போகிப்பண்டிகை

இதில் இரண்டு அதாவது பாவை நோன்பு மற்றும் வைகுண்ட ஏகாதசி வைணவர்களுக்கு உரியது. மூன்றாவது திருவாதிரை, சைவர்களுக்குரியது. 
வைணவ சமயத்தவர்களுக்கு திருப்பாவை போன்று சைவ சமயத்தவர்களுக்கு திருவெம்பாவை.