Friday 8 June 2012

ஆனித் திருமஞ்சனம்


தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். 
ஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கு உகந்தது. சிவாலயங்களில் சிவனுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்த நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் சகல விதமான பாவங்களும் தீரும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனுக்கு உகந்த விரதங்களில் இந்த திருமஞ்சனமும் ஒன்று.

அன்றைய தினம் சிவதலங்களில் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும். அன்றைய தினம் விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல், ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்தால் அனைத்து விதமான பலனும் கிடைக்கும்.

இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பொன்னம்பலமான சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். வெள்ளியம்பலமான மதுரையில் சுந்தரத் தாண்டவம் ஆடினார். இங்கு ராஜசேகர பாண்டியன் வேண்டிக் கொண்டதால், கால் மாறி வலதுகாலைத் தூக்கி ஆடியதாக வரலாறு சொல்கிறது. தாமிரசபையான திருநெல்வேலியில் இறைவன் ஆடியது சங்காரத் தாண்டவம்.

சித்திர சபையான குற்றாலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளதால், இத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரிந்தார் என்பர். ரத்தின சபையான திருவாலங்காட்டில் வலக்காலை உச்சந்தலை வரைத் தூக்கி அனைவரும் வியக்கும் வண்ணம் ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார்.

திருவெண்காடு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடனசபை ஆதி சித்சபை என்று போற்றப்படுகிறது. இங்கே சுவாத கேது என்ற மன்னன் வேண்டிக்கொண்ட வண்ணம் இறைவன் நவ தாண்டவங்கள் ஆடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதற்குப் பிறகுதான் சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடினாராம். அதனால் இத்தலத்தினை ஆதிசிதம்பரம் என்று சொல்வர்.

இதேபோல் பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.

இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.

ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர்.

இத்தனை சிறப்புமிக்க ஆனித் திருமஞ்சனம் இந்த ஆண்டு 25-6-12 வருகிறது.

ஆனி மாதம்

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். ஆனி மாதத்தின் மிகச் சிறப்பான விரதம் "ஆனித் திருமஞ்சனம்" ஆகும்.