Tuesday 21 February 2012

காரடையான் நோன்பு (சாவித்ரி விரதம் )

கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து இல்லற தர்மங்களை கடைபிடிப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. மனைவி, மக்களை பாதுகாத்து அற வாழ்வு நடத்தி வரும் குடும்பத் தலைவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இல்லற தர்மத்தை சிறப்பாக கடைபிடிக்கிற வகையில் தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிற வகையில் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள் ‘கர்வா சவுத்’ எனப்படுகிறது.மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் தமிழகத்தில் இது ‘காரடையான் நோன்பு’ என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் முழுக்க முழுக்க பெண்கள் தொடர்பான விரதம். தங்கள் மாங்கல்ய பலம் கூடுவதற்காக பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு.

சத்யவான், சாவித்ரி கதையே இந்த விரதம் தோன்ற காரணமானது.அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவான். சொத்து, சுகங்கள் அனைத்தையும் இழந்ததால் காட்டில் விறகு வெட்டி வந்தான். அவனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள் சாவித்ரி. இருவரும் காட்டிலேயே வாழ்ந்து வந்தனர்.இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது. சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்றும், இன்னும் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தாள் சாவித்ரி. கணவனின் நீண்ட ஆயுளுக்காக காட்டிலேயே விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாள் வந்தது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தனது விரதத்தை முடித்திருந்த தினம் அன்று. மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கிற நேரம். மங்களகரமான அந்த நேரத்தில் தனது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி சாவித்ரி விரதம் முடித்திருந்தாள்.
அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.
நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன், என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, நண்பரே! என்றாள்.நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,ஒருவன் மற்றொருவனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், ‘தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைத் தருகிறேன் கேள். ஆனால் எடுத்த உயிரை கொடுக்க வாய்ப்பில்லை. வேறு ஏதாவது வரம் கேள் தருகிறேன்’ என்றான். சாவித்ரி சாதுர்யமாக ‘வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்’ என்றாள்.

உயிருடன் போகும் அவசரத்தில் இருந்த எமன் சற்றும் யோசிக்காமல், ‘கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்து அருளி புறப்பட்டான். ‘‘தர்மராஜரின் வாக்கு பலிக்க வேண்டும். வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்’’ என்றாள் சாவித்ரி. அவளது பதி பக்தியையும் சாதுர்யத்தையும் எண்ணி வியந்தான் எமதர்மன். சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான். நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினான். காட்டிலேயே சாவித்ரி மண்ணை பிசைந்து அடைகளாக தட்டினாள். காமாட்சி அம்மனை நினைத்து படைத்து அதையே உண்டு விரதத்தை முடித்தாள். இதன் அடிப்படையிலேயே மண்சோறு உண்ணும் வழக்கம் வந்தது.
இதை நினைவுகூரும் வகையில் முதல் போகத்தில் விளையும் நெல்லை குத்தி (கார் அரிசி) அதில் அடை செய்து அம்பாளுக்கு படைத்து வழிபடுகின்றனர் பெண்கள். இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய், பூ, மாலை சாத்தி பட்டுத்துணி சுற்றி வைக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு காமாட்சி அம்மனை வழிபட்டு, விரதத்தை முடிப்பார்கள். பின்னர் மஞ்சள் சரடு அணிவார்கள். தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பு. சிவபெருமானுக்காக உப்பு அடையும் பார்வதி தேவிக்காக வெல்ல அடையும் நிவேதனம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம். இன்று மாலைக்கு பிறகு பங்குனி மாதம் பிறப்பதால் மாலை வேளையில் நோன்பை முடித்து சரடு கட்டிக்கொள்ளலாம். இந்த நோன்பு பூஜையை செய்வதால், கணவன், மனைவி இடையே இருக்கும் பூசல்கள் மறையும். ஜாதகத்தில் அஷ்டம ஸ்தான கிரக தோஷங்கள் நீங்கும். பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்ய தடை நீங்கி வம்சம் துளிர்க்கும் என்பது ஐதீகம்.

மயானக் கொள்ளை

மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்.

அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.

இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு, "கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!' என சாபமிட்டாள். அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள். அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்.

அப்போது  ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும்  கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம்  கூறினாள். அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது. 

அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டா டப்படுகிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இவ்விழா விமரிசையாக நடக்கும். அங்கு மட்டுமல்ல; எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் இம்மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

மாசிமகம்

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசிமகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோவில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். 

புனித நீராடல்

மாசி மகம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். 
 மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்ம தேவன்.  

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப் பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. அத்தினமே மகாமகம்.

மாசி மகத்தில் மாசி மகப் பெருவிழா 10 தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றம் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழு நிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடக்கும்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும், சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா, ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர் கும்பகோணம் வந்து  சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் என்றார்.

அதன்படி ராமர் அங்கு வந்து விஸ்வேஸ்வரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றது. மாசிமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோவில்.

கும்பேஸ்வரர் கோவில்

காவிரி நதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்கிறது. தலைக்காவிரி, அகன்ற காவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம், ஆகியன அவை. இவற்றில் நடு நாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம்.

ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண் டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசி மகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் பிரதான வழிபாட்டுத் தலமாக திகழ்கிறது.

இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் 16 படித்துறைகள் உள்ளன. இத்துறைகளில் அனைத்திலும் சிவன் சந்நிதிகள் உள்ளன. இவற்றை க ட்டியவர் கோவிந்த தீட்சிதர். இவர் நாயக்க மன்னர்களின் அவையில் இருந்தவர்.

ஒரு மகாமக நாளில் இக்குளத்தின் வடமேற்கு மூலையில், தன் எடைக்கு எடையாக தங்கத்தை கும்பேஸ்வரருக்கு கொடுத்தார். இப்படி கொடுப்பதற்கு "ஹிரண்ய கர்ப்பம்' என்று பெயர்.

மகாமக தீர்த்தம்

கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும், தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது.

இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல் காட்சி அளிக்கும். இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும்.

ஆனால் காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால்தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக் குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும்.

சான்றாக கூறப்படும் கர்ண பரம்பரைக் கதையை இங்கு காண்போம்.

முன்பு ஒரு காலத்தில் வருணபகவானைப் பிடித்த பிரகத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருண பகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும்.

அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடு பேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறு வர மளித்தார். முன்பு ஒரு காலத்தில் பார்வதி சமேதராகக் கலையில் எழுந்தருளி இருந்தார்.

அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவ நிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன்

`தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங் கொண்டு செயற்படுகின்றாம்'

என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெ றுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார். இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது.

அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப் பெற்றேன். கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுக்கு கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து, உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச்சங்கு வடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார்.

அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டிருந்தார். ஒரு மாசிமக நாளில் தட்சபிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான்.

எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று, இது சிவனாரின் வரப்படி பார்வதி தேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண் மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசி மகம் பெருமை பெறுகின்றது. இத்தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

மாசி மாத சிறப்புகள்

  • அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
  • மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப்படுகிறது.
  • சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராணக் கூற்று. பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.
  • மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.
  • மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.
  • மாசி மாதத்திற்கு அதி தேவதை மகாவிஷ்ணு. அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும். மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளிகொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார். வல்லாள மகா ராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது.
  • மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடைபெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.
  • மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.
  • மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்டது மாசி மாதம்.

காரைக்கால் அம்மையார் 


வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ் கிறார். கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், "இறைவா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர். ஆடல் வல்லானின் அற்புதங்களை நெஞ்சில் நிறுத்தி, "திருவந்தாதி' என்னும் அரிய நூலை அருளினார். 101 பாடல்கள் கொண்ட இந்த நூலில், பத்து பாடல்களுக்கு ஒருமுறை தாம் பெற்ற இறையனுபவத்தைக் கூறியுள்ளார். இரட்டை மணிமாலை என்னும் நூலும் காரைக்கால் அம்மையார் இயற்றியதே.

அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடியருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது இம்மாசி மாதத்தில்தான்.



குபேரன் பேறு பெற்ற தலம்!

திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.

ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.

மகா சிவராத்திரி

சிவம் என்ற சொல்லுக்கு ' சுகம்' என்ற பொருள் உண்டு. சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மஹா பிரளய வெள்ளத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே 'மகா சிவராத்திரி ' என்று சைவ சமயம் கூறுகின்றது. 

வருடந்தோறும், மாசி மாத கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் சிவராத்திரி தினமாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 

 
ஐந்து வகை சிவராத்திரி:
நித்திய சிவராத்திரி : ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்து, ஒரு வருடத்தில் இருபத்திநான்கு சிவராத்திரி பூஜை புரிவது நித்திய சிவராத்திரி. 

பட்ச சிவராத்திரி : தை மாதம் கிருஷ்ண பிரதமை முதல் பதின்மூன்று நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு, சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி. 

மாத சிவராத்திரி : தை மாதத்தில் சுக்ல திருதியை, மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில், முதலில் வரும் திருதியை, சித்திரையில் கிருஷ்ண அஷ்டமி, வைகாசி மாதம் முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பட்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும் அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்தசிகள் ஆகிய இவை அனைத்தும் மாத சிவராத்திரிகள்.

யோக சிவராத்திரி : சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.

மகா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி இரவு மகா சிவராத்திரி புண்ணிய காலமாகும். அன்றைய தினம் இரவு கடைசி பதினான்கு நாழிகை ( ஐந்து மணி முப்பத்தாறு நிமிடங்கள் ) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

இனி சிவராத்திரியின் மகிமையை ப் பற்றி பார்ப்போம்:

அகிலலோக நாயகி பார்வதிதேவி ஆடல் நாயகனாம் சிவபெருமானுடன் விளையாடச் சித்தம் கொண்டாள். ஒருமுறை, விளையாட்டாக அன்னை, சிவபெருமானின் இரு கண்களையும் தன் கரங்களால் மூடிக்கொண்டாள். சிவனின் இரு கண்களாகத் திகழும் சூரியனையும், சந்திரனையும் மறைத்து விட்டால், உலகில் ஒளியேது? அகிலம் ( உலகம் ) முழுவதும் கணப்பொழுதில் இருண்டு போனது. 

நட்சத்திரங்களின் ஒளிகூட இல்லாமல், உலகை இருள் சூழ்ந்து கொண்டது. அந்த நாளே ' சிவராத்திரி' என அழைக்கப்படுகிறது. 

ஒளி வேண்டி அனைத்து உயிர்களும் சிவனை வேண்ட, உலகுக்கு ஒளி கொடுப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். வெப்பக்கனலாக வீசிய நெற்றிக்கண்ணின் ஒளி கண்டு பார்வதி தேவியே நடுநடுங்கினாள். அம்பிகையைக் கருணையுடன் நோக்கிய சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய வெப்ப ஒளியைக் குளிர்நிலவாக்கி, அன்னையையும், தம் அடியவர்களையும் ஆட்கொண்டார். உலகுக்கு ஒளியேற்றிய  சிவனுக்கு, அந்த நன்னாளில் நெய் தீபமேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது பெரியோர் வாக்கு. 


ஒரு வேடன் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு புலி அவனை விரட்டியது. ஓடிச் சென்று அவன் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். அது ஒரு வில்வ மரம். மரத்தின் கீழே, புலி படுத்துக் கொண்டது. செய்வதறியாமல் திகைத்த வேடன், பொழுதைக் கழிக்கவும், தூக்கத்தை விலக்கவும் ( தூங்கினால், கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவேனோ என்று பயந்து ) அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். 

கீழே விழுந்த இலைகள், அந்த மரத்தினடியில் இருந்த சிவ லிங்கத்தின்மேல் விழுந்தன. வேடன் தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்த அந்தச் செயல், சிவனுக்குரிய அர்ச்சனையாக மாறி, அவனுக்குச் சிவனின் அருள் கிடைத்தது. அன்று சிவராத்திரியாதலால், கண் விழித்துப் பூஜை செய்த பயனும் கிடைத்தது. அதனால், வேடனின் பாவங்கள் நீங்கி, முத்தி பெற்றான். 

சிவராத்திரியன்று முழு இரவும் கண்விழித்துச் சிவபெருமானைப் போற்றி வழிபாடு செய்து, அவரது அருள் பெற்று வாழ்வோமாக!!!

மாசி மாதம்

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
இம்மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள்
* மகாசிவராத்திரி
* மாசி மகம், போன்றவை...