Tuesday 18 October 2011

ஸ்கந்த சஷ்டி விரதம்

முருகப் பெருமான் அசுரன் சூரபத்மனை வதம் செய்த தினம்தான் சூரசம்ஹாரம். வருடந்தோறும் ஐப்பசி திங்கள் தீபாவளிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கும்.

முருகன் சூரபத்மனுடன் போரிட்ட ஆறு நாளும் ஸ்கந்த சஷ்டி விரதம் அனுசரித்து விட்டு அசுரனை வதம் செய்த தினத்தை சூரசம்ஹாரத் திருநாளாகக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வர்.

உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் இந்த ஆறு நாளும் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு விரதமிருப்பர். முடியாதவர்கள் சூரசம்ஹாரமன்று மட்டும் விரதமிருப்பர்.

கேதார கௌரி விரதம்

விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையில், விநாயகனும் முருகனும் கூட இருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் கூடியிருந்தனர். நாரதர் இசை மீட்டினார். நந்தி மத்தளம் கொட்ட, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோரின் நடனம் அமர்க்களமாக நடந்தேறியது.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் விகடக்கூத்து ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார். பிறகு உமாதேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். கோபமுற்ற உமாதேவி “உனது சக்திகளை இழக்கக் கடவுக” என்று சபித்தார். அதனால் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார் பிருங்கி. தன் பக்தன் படும் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் தடியொன்றைக் கொடுத்து அதனை ஊன்றுகோலாகக் கொண்டு நடக்க வழி செய்தார். இதனால் சிவன் மேல் கோபம் கொண்டு பூவுலகுக்கு வந்து, ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். தேவியின் வருகையால் அந்த வனமே புதுப்பொலிவு பெற்றது. அங்கு வசித்த கௌதம முனிவர் இத்திடீர் மாற்றம் ஏன் அறிய முனைந்தார். உமாதேவியைக் கண்டு நடந்தவற்றைக் கேட்டறிந்து கொண்டார்.
புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றி கெளதம முனிவர் உமாதேவியிடம் விளக்கினார். உமை அம்மையும் விரதம் மேற்கொண்டு விரத முடிவில் சிவன் மகிழ்ந்து பார்வதி தேவியை ஆட்கொண்டு, அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

ஐப்பசி மாதம்

ஐப்பசி மாதம் 'துலா மாதம்' என போற்றப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் பகலும், இரவும் சமமாக இருக்கும். அதனால்தான் அது, "துலா (தராசு) மாதம்' எனப் பெயர் பெற்றது.

ஸ்ரீரங்கத்தில் அருள் புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஐப்பசி மாதத்தில் தங்கக் குடத்தில் ஸ்ரீரங்கம் தென்கரையில் ஓடும் காவிரி நதியிலிருந்து திருமஞ்சனத்திற்கு யானை மீது தீர்த்தம் கொண்டு வருவார்கள். இது பெருமாளுக்கு நடைபெறும் "துலா ஸ்நானம்' ஆகும்.

பார்வதி தேவி, விரதம் கடைப்பிடித்து சிவபெருமானின் உடலில் சரிபாதி இடத்தைப் பெற்றது துலா மாதமான ஐப்பசியில் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

திருப்பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவிற்கு மாலை சூடிய நாள், ஓர் ஐப்பசி மாத சதுர்த்தி நாள் ஆகும். இந்த நாளில்தான் ராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த பின், சீதாப் பிராட்டி மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்கு வந்தார்.

கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகிய விரதங்கள் ஐப்பசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

Monday 10 October 2011

நவராத்திரி - கொலு - சிறப்புக் காட்சிகள்

நவராத்திரியன்று அனைத்து கோவில்களிலும் இறைவன் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். அவற்றில் சில காட்சிகளை இங்கு நாம் பார்ப்போம்.


   
   
   
   
      
   
   
  
 


விஜயதசமி

நவராத்திரியின் 10-ம் நாள் துர்கை மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் என்பதால் அன்று தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்று பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைப்பெறுகிறது. 

ஆயுத பூஜை

சரஸ்வதி பூஜையன்றே ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்கு பல விஷயங்களில் உதவும் பலதரப்பட்ட இயந்திரங்களுக்கு அன்று ஒருநாள் ஓய்வு கொடுத்து அதை நன்கு சுத்தப்படுத்தி சந்தனம் குங்குமம் பூசி வழிபடுவது வழக்கம். 

சரஸ்வதி பூஜை

நவராத்திரி 9ம் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அன்று சரஸ்வதி தேவிக்கு அலங்காரம் செய்து படத்தின் முன் புத்தகங்கள், இசைக்கருவிகள் போன்றவை வைத்து வணங்குவர்.