Thursday, 12 January 2012

பொங்கல்

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா. காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

போகிப் பண்டிகை

தீபாவளியைப் போலவே பொங்கலும் கண்ணபிரான் தொடர்புடைய பண்டிகையே!

இந்திரனுக்கு `போகி' என்ற பெயரும் உண்டு. மழையைப் பெய்யவைக்கும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை முதல் நாள் புதுப் பயிரைப் படைத்து ஆராதிக்கும் பழக்கம் நிலவி வந்தது.

கிருஷ்ண அவதாரத்தின்போது கிருஷ்ண ர், அந்தப் படையலை நாராயணனின் அம்சமான சூரியநாராயணனுக்குப் படைக்கும்படி கட்டளையிட்டார். அதனால் கோபம் கொண்ட இந்திரன், பெரும் மழை பெய்யச் செய்தான். மக்கள் நிலை குலைந்து தவித்தனர். மாடுகள், கன்றுகளைத் தொலைத்துக் கதறின. அபயம் அளித்து கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார், கிருஷ்ணன். அன்று முதல் கண்ணபிரான் ஆணையின்படி மக்கள் சூர்ய பூஜை செய்ய ஆரம்பித்தனர். அதுவே பொங்கல் திருநாள்.
இதனால் வெட்கமடைந்த இந்திரன், இறைவனை வேண்ட, இறைவன் சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரில் போகிப் பண்டிகை கொண்டாடப் பணித்தார்.

காளிங்க மடுவில் குதித்த கண்ணனுக்கு காளிங்கனின் விஷம் ஏறாதபடி ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுவதும் விழித்திருந்தனர். அதன் காரணமாகவே போகியன்று பறைகொட்டும் வழக்கம் உண்டாயிற்று.

ஆருத்ரா தரிசனம்


” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்... “ எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும். திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான். இருப்பினும் சிவாலயங்களில் மிகமுக்கியமானது ஆருத்ரா தரிசனம். கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.


அந்த காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”  என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.

நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்' என்பர். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. "முசலகம்' என்றால், "காக்கா வலிப்பு!' இதனால், அவன், "முசலகன்' என்றாகி, தமிழில் முயலகன் ஆனான். முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன். மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பது இதன் தத்துவம். இடது காலை, "குஞ்சிதபாதம்' என்பர். "குஞ்சிதம்' என்றால், "வளைந்து தொங்குதல்' எனப் பொருள். ஆம்... அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.

திருவாதிரை களி
 
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே, தான் உணவருந்துவார்.


ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின; அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தடைந்தார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.


மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.


எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.


சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

வைகுண்ட ஏகாதசி

"காயத்ரிக்கு நிகரான ம்ந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமுமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமுமில்லை!" என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.
 
கிருஷ்ண பரமாத்மா ‘மாதங்களில் தான் மார்கழியாய் இருப்பேன்’ என்கிறார். அதனால் வைணவத் தலங்களில் மார்கழி மாதத்திற்கு என தனிச்சிறப்பு உண்டு. உலகிற்கெல்லாம் படியளக்கும் பரந்தாமன் வீற்றிருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பதும் இம்மாதத்தில்தான் என்பதால் மார்கழி மாதம் வைணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களும் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்களும் ஒரு இரவு என்றும் கணக்கிடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதாவது தேவர்களின் இருட்டுப் பொழுதில்  உஷக் காலம் எனும் அதிகாலை நேரத்தில் நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள முகூர்த்த வேளையில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அச்சமயத்தில் ஆலயங்களில் திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவையும் படித்து மகாவிஷ்ணுவிற்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம். தேவர்களின்  அதிகாலை நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருந்தாலும் அரங்கன் அவ்வழியாக வெளியே வந்து தரிசனம் தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் அதிகாலையில் சொர்க்கவாசல் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். இந்த வைபவத்தை தாம் நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருப்போர் வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் அனுஷ்டிப்பது மேலானப் பலன்களைத் தரும்.

அதெல்லாம் சரி. ஏகாதசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள் என்று கேட்கிறீர்களா? ஒரு இலையை அசைப்பதற்கு கூட ஆயிரம் அர்த்தங்களை வைத்திருக்கும் அந்த பரம்பொருள் ஏகாதசி விரதத்திற்கு தகுந்த காரணம் இல்லாமல் வைத்திருப்பாரா என்ன? முரன் என்ற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.  அதனால் விஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் ஒரு குகையில் சென்று படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலானார். அச்சமயம் அவரைக் கண்ட முரன்  பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருக்கும் ஆற்றல் சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்று வித்தார். அவள் முரனுடன் போரிட்டு  அவனை வென்றாள்.  முரனை வென்ற பெண்ணுக்கு "ஏகாதசி' என்று அரங்கன் பெயர் சூட்டினார். அவள் அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சக்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்து விழிப்புடன் செயலாற்றி பரந்தாமனில் அருளைப் பெற்றதுப் போல நாமும் ஏகாதசித் திருநாளில் இரவெல்லாம் கண்விழித்து அந்த பரம்பொருளை தியானித்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

மார்கழி பாவை நோன்பு

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியுமுன்பே எழுந்து, பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி, மற்றும் ஆழ்வார் பாசுரங்களையும் பாடி மகிழ்வர்.

நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர்.

Monday, 19 December 2011

திருவெம்பாவை முதற்பாடல்


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வனசெவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

மார்கழி மாதம்


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
                                                                      - திருப்பாவை முதற்பாடல்

 என்று தொடங்கிவிட்டது மார்கழி மாதம். இம்மாதத்தின் முக்கிய விரதமாக கடைபிடிக்கப்படுவது பாவை நோன்பு.
 

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும்,  தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை படிக்க வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

மார்கழியில் அமைந்த மிக முக்கியமான வழிபாடு 4.

1. மார்கழி நோன்பு - பாவை நோன்பு
2. வைகுண்ட ஏகாதசி
3. திருவாதிரை
4. போகிப்பண்டிகை

இதில் இரண்டு அதாவது பாவை நோன்பு மற்றும் வைகுண்ட ஏகாதசி வைணவர்களுக்கு உரியது. மூன்றாவது திருவாதிரை, சைவர்களுக்குரியது. 
வைணவ சமயத்தவர்களுக்கு திருப்பாவை போன்று சைவ சமயத்தவர்களுக்கு திருவெம்பாவை.