Thursday 12 January 2012

தைப்பூசம்

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும். இத்தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். பார்வதி தேவி பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிது தைப்பூச நாளில் தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தளங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தைப்பூச விரதமுறை : 

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம், சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

No comments:

Post a Comment